மகளிர் கூட்டுறவு பால் சங்கம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
- நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரின் புதிய அறிவிப்பின்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் 40 இடங்களில் தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்திட நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்க ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மகளிர் இச்சங்கத்தில் உறுப்பி னர்களாகப்படு வார்கள். இதற்கான வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தின் கீழ் மானியம் பெற்றிருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். சங்க உறுப்பினர் குறைந்தபட்சம் ஒரு கறவை மாடாவது வைத்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மகளிர் பயன்பெறும் வகையில், ஆதிதிராவிடர் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைத்திட தலா 50 உறுப்பினர்களை கொண்ட ஒரு புதிய பால் உற்பத்தியாளர் சங்கம் அமைக்க வேண்டும். அச்சங்கத்தின் தேவைப்படும் பதிவேடு, புத்தகம், பால் கேன்கள் மற்றும் பரிசோதனை உபகரணங்கள் வாங்க தலா ரூ.1 லட்சம் பயன்படுத்திடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் குழுக்கள் அதிகம் பயன்பெற்ற கிராமங்களில் ஆதி திராவிடர் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும்.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் இனத்தை சார்ந்தவர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக முதல் மாடி, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.