உள்ளூர் செய்திகள் (District)

அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரவிக்கு கொலை மிரட்டல்

Published On 2023-03-24 08:56 GMT   |   Update On 2023-03-24 08:56 GMT
  • சட்டசபையில் நடைபெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களே, எம்.எல்.ஏ.ரவியை மிரட்டி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
  • மிரட்டல் விடுத்த நபர்களை பிடிக்க போலீசார் செல்போன் எண்களை வைத்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

சென்னை:

தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே நேற்று மோதல் வெடித்தது.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தொடர்பாக சட்டசபையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. சார்பில் ஆதரிப்பதாக கூறியதை தொடர்ந்தே இரு தரப்பு எம்.எல்.ஏ.க்களும் காரசாரமாக மோதிக் கொண்டனர்.

ஓ.பி.எஸ். தரப்பு எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியனுக்கும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கும் இடையே நேருக்கு நேர் வார்த்தை மோதல் ஏற்பட்டது. அப்போது கைகளை காட்டி காட்டி பேசி இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி வைரலானது.

ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியனும் அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான ரவிக்கும் இடையே நேருக்கு நேர் ஏற்பட்ட மோதலில் இருவரும் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்றைய சட்டமன்ற கூட்டம் முடிந்த பின்னர் எம்.எல்.ஏ.ரவி, திருவல்லிக்கேணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்கி இருந்தார். அப்போது அவரது செல்போனில் பேசிய சிலர் மிரட்டும் தொனியில் கொலை மிரட்டல் விடுத்தனர். சட்டசபையில் நடைபெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களே, எம்.எல்.ஏ.ரவியை மிரட்டி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து ரவி எம்.எல்.ஏ. திருவல்லிக்கேணி போலீசில் கொலை மிரட்டல் குறித்து புகார் அளித்தார். அதில் எந்தெந்த எண்களில் இருந்து மிரட்டல் வந்துள்ளது என்பது பற்றிய தகவல்களையும் குறிப்பிட்டு உள்ளார். இதுதொடர்பாக உதவி கமிஷனர் பாஸ்கர், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மிரட்டல் விடுத்த நபர்களை பிடிக்க போலீசார் செல்போன் எண்களை வைத்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

Tags:    

Similar News