உள்ளூர் செய்திகள் (District)

அரசு வேலை வாங்கி தருவதாக பஸ் கண்டக்டரிடம் ரூ.29 லட்சம் மோசடி- ஒருவர் கைது

Published On 2024-09-20 09:19 GMT   |   Update On 2024-09-20 09:21 GMT
  • கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி சாமிக்கண்ணு மகன் விஜயை மகேந்திர ராஜா டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
  • மோசடிக்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திர ராஜா தலைமறைவாகி விட்டார்.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம், பழனியப்பா தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (56). தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அந்தியூர் கிளையில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் விஜய் பி.இ. சிவில் பட்டப்படிப்பு படித்து முடித்து விட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். சாமிக்கண்ணு தனது மகன் விஜயை எப்படியாவது அரசு பணியில் சேர்த்து விட வேண்டும் என்று தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் அரசு போக்குவரத்துக் கழகம் கோபி கிளையில் டிரைவராக பணிபுரிந்து வரும் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சாமியப்பன் என்பவர் தனக்கு தெரிந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரா ராஜா என்பவர் உங்கள் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சாமிக்கண்ணிடம், மகேந்திரராஜாவை அறிமுகம் படுத்தியுள்ளார்.

பின்னர் சில நாட்களில் மகேந்திர ராஜா தொலைபேசி மூலம் சாமிக்கண்ணுவை தொடர்பு கொண்டு உங்கள் மகனுக்கு வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதி சாமிக்கண்ணு ரூ.15 லட்சத்தை மகேந்திர ராஜாவிடம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி சாமிக்கண்ணு மகன் விஜயை மகேந்திர ராஜா டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பணி நியமன ஆணையை அவருக்கு கொடுத்துள்ளார்.

பின்னர் மகேந்திரா ராஜா மீண்டும் கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி சாமிக்கண்ணிடம் இருந்து மேலும் ரூ.14 லட்சத்தை பெற்றுக்கொண்டார். மேலும் விஜய்யிடம் கொடுத்த பணி நியமன ஆணையை திரும்ப வாங்கிக்கொண்டு இ-மெயில் மூலம் வேலைக்கான உத்தரவு வரும் என்று கூறி உள்ளார். ஆனால் இதுவரை எந்த ஒரு உத்தரவும் வரவில்லை. இது குறித்து சாமிக்கண்ணு, சாமியப்பனிடம் கேட்டபோது அவர் காலம் தாழ்த்தி வந்தார். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாமிக்கண்ணு இது குறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் சாமியப்பனை கைது செய்தனர். மேலும் இந்த மோசடிக்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திர ராஜா தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இதேபோன்று வேறு யாரிடமும் மோசடியில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News