- 1856 மாணவர்கள் கலந்து கொண்டனர்
- மாவட்ட எஸ்பி தொடங்கி வைத்தார்
அரியலுார்,
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இந்த போட்டிகளானது பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொது பிரிவு, அரசு ஊழியர்கள,் மாற்றுத்திறனாளிகள் என தனித்தனியாக நடைபெற உள்ளது. நேற்று தடகளம் பிரிவில் 364 மாணவர்கள், 305 மாணவிகள் என மொத்தம் 669 மாணவர்கள், கபடி போட்டியில் 780 மாணவ, மாணவிகள், வலைப்பந்து போட்டியில் 192 மாணவர்கள், சிலம்பம் போட்டியில் இரட்டை கம்பு வீச்சு, ஒற்றைக் கம்புவீச்சு, மான் கொம்பு, சுருள்வாள் உள்ளிட்ட பிரிவுகளில் 128 மாணவ, மாணவிகள், டேபிள் டென்னிஸ் போட்டியில் 87 மாணவ, மாணவிகள் என மொத்தம் 1,856 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வருகிற 24-ந் தேதி இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம், கீழப்பழூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.