விலையற்ற பொருட்கள் வழங்கியதில் அரசுக்கு ரூ.3.23 கோடி இழப்பு
- நகராட்சியில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததால் ரூ.94 லட்சத்து 88 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
- சட்டப்பேரவை பொது கணக்கு குழுத் தலைவர் குற்றச்சாட்டு
அரியலூர்,
அரியலூரில் சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், சரஸ்வதி, சிந்தனச்செல்வன், மாரிமுத்து ஆகியோர் கொண்ட குழுவினர், அரசு மருத்துவக் கல்லூரி, அரசு சிமெண்ட் ஆலை, உயரிய படிம அருங்காட்சியகம், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஆய்வு செய்தனர்.பின்னர் சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது,கடந்த ஆட்சியில் அரியலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததால் ரூ.94 லட்சத்து 88 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. சமூக நலத்துறை சார்பில் விலையற்ற பொருள்களை சரியாக பரிசீலனை செய்யாமல் கொடுத்ததில் ரூ.3.23 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆதிதிராவிட நல்லது துறை சார்பில் மாணவர்களுக்கான உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை செலவு செய்யாமல் மீண்டும் அத்துறைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் கனிம வளங்களை வெட்டி எடுத்ததில் தவறுகள் நடந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை தெரிவித்துள்ளது. இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெரும் அனைத்து அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி, எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன், பேரவை செயலாளர் சீனிவாசன், சார்வு செயலாளர் பாலசீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.