தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற கடைகளுக்கு சீல்
- 32 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 15.4 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது
- உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டப்படி மறு அறிவிப்பு வரும்வரை மூடி சீல் வைக்கப்பட்டது
ஜெயங்கொண்டம்
தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில், அரியலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகிறது.
இந்தவகையில் உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து தா.பழூர் பகுதி மற்றும் சிலால் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 32 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 15.4 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
கலியமூர்த்தி, மகேஷ்குமார் என்பவர்களுக்கு சொந்தமான 2 கடைகள் தொடர் குற்றம் புரிந்தமைக்காக உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டப்படி மறு அறிவிப்பு வரும்வரை மூடி சீல் வைக்கப்பட்டது. 3 கடைகளுக்கு தலா ரூ.5,000 அபராதமாக என ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இது போன்று தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு கண்காணித்திட உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி, உணவு பாதுகாப்பு அலுவலர் ரத்தினம் மற்றும் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், துணை காவல் ஆய்வாளர் மனோகரன் ஆகியோர் ஈடுபட்டனர்.