உள்ளூர் செய்திகள்

மின் கம்பத்தை அகற்றக்கோரி டிரான்ஸ்பார்மர் மீது ஏறி எதிர்ப்பு தெரிவித்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரி

Published On 2024-11-24 05:33 GMT   |   Update On 2024-11-24 05:33 GMT
  • மின்வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் கடும்எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பவானி:

ஈரோடு, பவானி, மேட்டூர், தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் குருப்பநாயக்கன்பாளையம் முதல் பவானி கோண வாய்க்கால் வரை 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

குருப்பநாயக்கன் பாளையம் பகுதியில் புறவழிச்சாலை பிரிவில் நேற்று தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள மழைநீர் வடிகால் மீது ஆபத்தான நிலையில் மின்வாரியத்தின் சார்பில் மின் கம்பம் அமைத்து டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணி நடைபெற்றது.

பவானி வடக்கு மின்வாரிய உதவி பொறியாளர் லெனின் லிங்கேஸ்வரன் மேற்பார்வையில், மின்வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சதாசிவம் முக்கியமான சந்திப்பு சாலையில் நெடுஞ்சாலை துறை அனுமதி பெறாமல் மின் கம்பம் நடப்பட்டுள்ளதாகவும், இதனால் வளைவில் வாகனங்கள் திரும்பும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறினார்.

மேலும் நெடுஞ்சாலை துறை ஒப்புதல் பெறாமல் நடப்பட்ட மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு மின்வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் கடும்எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் ஒப்புக் கொள்ளாததால் கோபமடைந்த நெடுஞ்சாலை துறை அதிகாரி சதாசிவம் புதிதாக பொருத்தப்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மர் மீது திடீரென ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பின்னர், நெடுஞ்சாலையில் நடப்பட்ட மின்கம்பத்தை ஒரு வார காலத்திற்குள் அகற்றி கொள்வதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து பிரச்சனை முடிவுக்கு வந்தது.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News