லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.10¾ லட்சம் மோசடி செய்தவர் கைது
- தலைமறைவாக இருந்த சிவக்குமாரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கைது செய்யப்பட்டுள்ள சிவக்குமார் மீது பல மோசடி வழக்குகள் உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 62). கடந்த ஆண்டு மே மாதம், இவரிடம், பல்லடம், வேலப்ப கவுண்டன்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (53) என்பவர் 2 கோடி ரூபாய் லோன் வாங்கி தருவதாக கூறி, நில ஆவணம் மற்றும் ரூ.10.75 லட்சம் ரூபாய் பெற்றார். ஆனால் கூறியபடி லோன் பெற்று தராமல் காலம் கடத்தினார்.
இதையடுத்து ரத்தினசாமி, சிவகுமார் அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது முறையாக பதில் அளிக்கப்படவில்லை. தொடர்ந்து, ரத்தினசாமி போன்று பலரிடம் லோன் வாங்கி தருவதாக கூறி, நிலத்தின் ஆவணம் மற்றும் குறிப்பிட்ட தொகையை பெற்று சிவக்குமார் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக ரத்தினசாமி திருப்பூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், தென்காசியில் தலைமறைவாக இருந்த சிவக்குமாரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள சிவக்குமார் மீது பல மோசடி வழக்குகள் உள்ளது. இதனால் அவரை அடுத்தடுத்து வழக்குகளில் போலீசார் கைது செய்து வருகின்றனர்.