பொள்ளாச்சியில் கணவன்-மனைவி மீது தாக்குதல்
- காந்தபிரகாஷ் வேர்க்கடலை மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
- காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
கோவை
பொள்ளாச்சியை அடுத்த மேற்கு சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் காந்தபிரகாஷ் (வயது 43). இவர் வேர்க்கடலை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பாண்டி செல்வி (33).
இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த வீராசாமி என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காந்தபிரகாசிடம் ரூ.50 ஆயிரத்துக்கு வேர்க்கடலை வாங்கி உள்ளார். அதற்கான பணத்தை அவர் இதுவரை தரவில்லை என தெரிகிறது.
சம்பவத்தன்று பாண்டி செல்வி, வீராசாமியிடம் பணத்தை கேட்பதற்கு அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு அவரிடம் பணத்தை கேட்டுள்ளார். அதற்கு அவர் பணத்தை தருவதாக கூறினார்.
இதையடுத்து பாண்டி செல்வி வீடு திரும்பினார். சிறிது நேரம் கழித்து வீராசாமியின் மகன் டிரைவர் வேலை செய்து வரும் கார்த்தி (26)என்பவர் குடிபோதையில் காந்தபிரகாசின் வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டின் முன்பு நின்று சத்தம் போட்டு கொண்டு இருந்தார். சத்தத்தை கேட்டு பாண்டி செல்வி வெளியே வந்து கார்த்தியிடம் எதற்காக சத்தம் போட்டு கொண்டு இருக்கிறாய் என கேட்டார். அதற்கு அவர் எதற்காக எனது வீட்டுக்கு வந்து பணம் கேட்டாய் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்தி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி பாண்டி செல்வியை தாக்கினார். இதைகண்டு அதிர்ச்சி அைடந்த காந்தபிரகாஷ் ஓடி வந்து அவரை தடுத்தார். அப்போது அவரையும் அங்கிருந்த கல்லை எடுத்து தாக்கினார்.
கணவன்-மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து பாண்டி செல்வி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.