உள்ளூர் செய்திகள்

மீன் வெட்டும் பலகை, பாத்திரங்களையும் அதிகாரிகள் தூக்கி சென்றுவிட்டனர்- மீனவர்கள் புகார்

Published On 2023-04-27 07:56 GMT   |   Update On 2023-04-27 07:56 GMT
  • மாற்று இடங்களில் கடைகள் வைக்க முடியாமல் நாங்கள் தவித்து வருகிறோம்.
  • அதிகாரிகள் வசம் உள்ள எங்களது மீன் வெட்டும் பலகை, பாத்திரங்கள் போன்றவற்றை திருப்பி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை:

சென்னை மெரினா கடற்கரையையொட்டி பட்டினப்பாக்கம் லூப் சாலையில் சாலை ஓரமாக அமைக்கப்பட்டிருந்த மீன் கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை அகற்றினர்.

இதற்கு மீனவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்ட போதிலும் மீன் கடைகள் அகற்றப்பட்டு மீனவர்கள் பயன்படுத்திய பொருட்களும் அப்புறப்படுத்தப்பட்டு லாரிகளில் அள்ளிச் செல்லப்பட்டன.

இந்நிலையில் மீனவர்கள் தங்களது உடைமைகளை அதிகாரிகள் தூக்கிச் சென்றுவிட்டதாக புகார் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக பாதிப்புக்கு உள்ளான மீனவர்கள் கூறும்போது, நாங்கள் காலம் காலமாக கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தநிலையில் அதிகாரிகள் அதனை பற்றியெல்லாம் கவலைப்படாமல் எங்களை வெளியேற்றி இருக்கிறார்கள்.

நாங்கள் மீன் வியாபாரத்திற்காக பயன்படுத்தி வந்த மீன் வெட்டும் பலகைகள் மற்றும் பாத்திரங்களையும் அதிகாரிகள் லாரிகளில் தூக்கி போட்டுக் கொண்டு சென்றுவிட்டனர்.

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வந்த அதிகாரிகள் நாங்கள் பயன்படுத்திய பொருட்களையும், தூக்கி சென்றுவிட்டதால் மாற்று இடங்களில் கடைகள் வைக்க முடியாமல் நாங்கள் தவித்து வருகிறோம்.

இதனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் வசம் உள்ள எங்களது மீன் வெட்டும் பலகை, பாத்திரங்கள் போன்றவற்றை திருப்பி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மாற்று இடங்களிலாவது நாங்கள் கடைகளை அமைத்து மீன் வியாபாரம் செய்யமுடியும் என்றனர்.

இதையடுத்து மீனவர்களிடம் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்று உள்ளது.

Tags:    

Similar News