ரெயிலில் பெண் பயணியிடம் செயின் பறித்த ஆட்டோ டிரைவர் கைது
- அபிராமி அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.
அரக்கோணம்:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை சேர்ந்தவர் அபிராமி. இவர்கடந்த வாரம் ஆவடியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார்.
அங்கிருந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் சாமி தரிசனம் முடித்துவிட்டு திருத்தணியில் இருந்து ஆவடி செல்வதற்கு மின்சார ரெயிலில் இரவு வந்து கொண்டிருந்தார். அப்போது ரெயில் அரக்கோணம் அருகே வந்த போது சிக்னலுக்காக நின்றது.
திடீரென மர்ம நபர் ஒருவர் திடீரென அபிராமி கழுத்தில் இருந்த 7 பவுன் தாலிசெயினை பறித்துக் கொண்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.
இதுகுறித்து அபிராமி அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் டி.எஸ்.பி கர்ணன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அரக்கோணம் ரெயில் நிலைய 4-வது பிளாட்பாரத்தில் போலீசுக்கு சந்தேகம் அளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அதில் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் நேரு நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாகராஜ் (வயது 35) என்பதும், அவர் ரெயிலில் பெண் பயணிகளிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 11 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.