வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ்- 4 பேர் கைது
- போலீசார் கண்காணித்து தீவிர நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ரேஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது.
- ரூ.4 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரையில் பணம்கட்டி ரேசில் ஈடுபட்டது தெரியவந்தது.
பூந்தமல்லி:
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மெரீனா மற்றும் புறநகர் பைபாஸ் சாலைகளில் பைக்ரேஸ், ஆட்டோ ரேஸ் அடிக்கடி நடந்து வருகிறது. போலீசார் கண்காணித்து தீவிர நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ரேஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில் செங்குன்றத்தில் இருந்து அலமாதி பைப்பாஸ் வழியாக வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் நடப்பதாக பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரணையை தொடங்கிய போக்குவரத்து போலீசார் பூந்தமல்லி அருகே வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதில் ஆட்டோக்கள் சீறிப்பாய்ந்து ரேசில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து ரேசில் ஈடுபட்டதாக அஸ்லாம் கான், சாலமன் தேவகுமார், அர்ஜுன், கோவிந்தராஜ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துதனர். அவர்களிடம் இருந்து 4 ஆட்டடோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்கள் ரூ.4 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரையில் பணம்கட்டி ரேசில் ஈடுபட்டது தெரியவந்தது. கைதான 4 பேரையும் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
ஆட்டோ ரேஸ் பற்றி தகவல் கிடைத்ததும் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டர் சுபாஷினி தலைமையிலான போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.