ஆதித்தனார் கல்லூரியில் மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு
- திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மன அழுத்த மேலாண்மை குறித்த உளவியல் பார்வை என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜசெல்வி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆரோக்கிய மன்றம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண்.43-ம் இணைந்து மன அழுத்த மேலாண்மை குறித்த உளவியல் பார்வை என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். ஆரோக்கிய மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜசெல்வி, காயாமொழி புற மருந்தக கண்காணிப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரூபன் கிங்க்ஸ்லி மற்றும் ஆராய்ச்சி மாணவர் டாக்டர் பிந்துஜா தரண் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இவ்வுரையில் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கு உடற்பயிற்சி, தியானம் ஆகியவற்றுடன் வைட்டமின் சி நிறைந்த பழங்கள், மெக்னீசியம் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்று கூறினர். நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்.43-ன் திட்ட அலுவலர் அபுல்கலாம் ஆஸாத் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கவிதா, தீபாராணி மற்றும் அபுல்கலாம் ஆஸாத் ஆகியோர் செய்திருந்தனர்.