தமிழகத்தில் நாளை முதல் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களை இயக்க தடை
- தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு இனி அவகாசம் அளிக்க முடியாது.
- 547 பஸ்கள் 'டிஎன்' எனப்படும் வாகன பதிவு எண்ணை பெறாமலேயே உள்ளது.
சென்னை:
அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று வெளி மாநில பதிவு எண்களை கொண்ட ஏராளமான ஆம்னி பஸ்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆம்னி பஸ்கள், பயணிகளுக்கான ஆம்னி பஸ்கள் போலவே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
எனவே, தமிழகத்தில் இயக்கப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தி இருந்தது. இதற்காக பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே 3 முறை அவகாசம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் இதுபோல் 652 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதில் 547 பஸ்கள் 'டிஎன்' எனப்படும் வாகன பதிவு எண்ணை பெறாமலே இருந்து வருகின்றன. மீத முள்ள பஸ்கள் மட்டுமே தமிழகத்தில் மறுபதிவு செய்து இயக்கப்பட்டு வருகின்றன.
எனவே, நாளை (14-ந்தேதி) முதல் உரிய தமிழக பதிவு எண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயங்க போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. இதை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரும் உறுதிப்படுத்தி உள்ளார். ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு இனி அவகாசம் அளிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவகாசம் வேண்டும் என்கிற பட்சத்தில் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள், போக்குவரத்து துறை ஆணையரிடம் அனுமதிக்காக முறையிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் நாளைமுதல் தமிழகத்தில் இயக்கப்படுவது தடை செய்யப்படும். இனி பயணிகள் அதில் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என போக்குவரத்துத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன், போக்குவரத்து துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்தினார்கள். சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்தில், போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரம் தலைமையில் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது.