தையல், அழகுகலை பயிற்சியால் பெண்களின் பொருளாதார நிலை மேம்படும்- களக்காடு புலிகள் காப்பக அதிகாரி அன்பு பேச்சு
- களக்காட்டில்3-வது கட்டமாக பெண்களுக்கு இலவச தையல் அழகு கலை பயிற்சி தொடக்க விழா நடந்தது
- திட்டத்தின் கீழ் 263 கிராம வனக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
களக்காடு:
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு கோட்டம், திருக்குறுங்குடி சூழல் சரகத்தின் சார்பில், களக்காட்டில்3-வது கட்டமாக பெண்களுக்கு இலவச தையல் அழகு கலை பயிற்சி தொடக்க விழா, கிராம வனக்குழு உறுப்பினர்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடந்தது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்ட அதிகாரியும், துணை வனபாதுகாவலருமான அன்பு தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார்.
மேலும் கிராம வனக்குழு உறுப்பினர்களுக்கு கடனுதவிகளையும், மண்டல அளவிலான இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்ற களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இறகு பந்துகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவிலேயே களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் தான் 25 ஆண்டுகளாக சூழல்மேம்பாட்டு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் 263 கிராம வனக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 20 கோடி நிதியும் உள்ளது.
பெண்களை மதிப்புமிக்கவர்களாக, மரியாதைக்குரியவர்களாக மாற்ற வேண்டும், அவர்கள் திறமையை வெளி கொண்டு வர வேண்டும், பெண்களுக்கு தன்நம்பிக்கையை கொடுக்க வேண்டும். அவர்கள் தங்களது சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதே வனத்துறையின் நோக்கமாகும்.
இதற்காகத்தான் இந்த தையல் அழகு கலை பயிற்சியை அளித்து வருகிறோம். கிராமங்களில் பெண்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்த தொழிலுக்கு மாற்றாக தையல் அழகு கலை பயிற்சியை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் பெண்களின் பொருளாதார நிலை மேம்படும்.
பயிற்சி பெற்ற பெண்களுக்கு சூழல் மேம்பாட்டு திட்ட அலுவலகங்கள் மூலம் ஆர்டர் எடுத்து கொடுக்கப்படும். இதனை கிராம தொழிலாக மாற்றுவதே வனத்துறையின் லட்சியமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் வன சரகர்கள் மீனா (திருக்குறுங்குடி சூழல் சரகம்), யோகேஸ்வரன் (திருக்குறுங்குடி), சிவலிங்கம் (கோதையாறு), களக்காடு நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ், ஒய்வு பெற்ற ஆசிரியர் கோமதிநாயகம், பள்ளி தாளாளர் கல்யாண சுந்தரம், நகராட்சி கவுன்சிலர்கள் ஆயிஷா லக்கிராஜா, முகம்மது அலி ஜின்னா, சூழல் திட்ட வனவர்கள் திருக்குறுங்குடி அப்துல்ரஹ்மான், களக்காடு சிவக்குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள், கிராம வனக்குழு தலைவர்கள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இசக்கியம்மாள் நன்றி கூறினார்.