உள்ளூர் செய்திகள்

கோவையில் புத்தக திருவிழா

Published On 2022-07-19 10:06 GMT   |   Update On 2022-07-19 10:06 GMT
  • 22-ந் தேதி தொடங்குகிறது
  • 1 லட்சம் மாணவ- மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

கோவை:-

கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் (கொடிசியா), கோவை மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து 6-வது ஆண்டாக கோவை புத்தகத் திருவிழா வருகிற 22- ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடக்கிறது.

2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த புத்தக திருவிழா நடைபெறவில்லை. 10 நாள் நடைபெறும் விழாவில் 300 பதிப்பாளர்கள் மற்றும் 1 லட்சம் மாணவ- மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.இந்த விழாவின் ஒரு பகுதியாக வருகிற 28-ந் தேதி 5 ஆயிரம் மாணவர்கள் திருக்குறள் ஒப்பிக்க உள்ளனர்.

புத்தக கண்காட்சிக்கு அனுமதி இலவசம். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மற்றும் புதுடெல்லி போன்ற பல்வேறு இடங்களில் இருந்து புகழ்பெற்ற பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். லட்சக் கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் இங்கு காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகளும், கலைஞர்களும் கலந்து கொள்ளும் கலை, இலக்கிய நிகழ்வுகள் நாள்தோறும் கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது

22-ந் தேதி மாலை 5.30 மணிக்கு கோவை புத்தகத் திருவிழாவை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் தொடங்கி வைக்கிறார். நிறைவு விழாவில் உள்ளாட்சி துறை அமைச்சர், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News