நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்கள்
- அம்பை அருகே உள்ள தனியார் பள்ளியில் பூதத்தான் 2020-ம் ஆண்டு 11-ம் வகுப்பும், சிவசண்முகம் 9-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
- கொரோனா பரவல் காரணமாக அப்போதைய அரசு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்தது. ஆனால் இவர்கள் இருவரையும் பள்ளி நிர்வாகம் தேர்ச்சி என அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பையை சேர்ந்தவர் பூவலிங்கம். இவரது மகன்கள் பூதத்தான் ( வயது 17), சிவ சண்முகம் ( 15).
அம்பை அருகே உள்ள தனியார் பள்ளியில் பூதத்தான் 2020-ம் ஆண்டு 11-ம் வகுப்பும், சிவசண்முகம் 9-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக அப்போதைய அரசு அனைத்து மாணவர்க ளும் தேர்ச்சி என அறிவித்தது. ஆனால் இவர்கள் இருவரையும் பள்ளி நிர்வாகம் தேர்ச்சி என அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் காரணம் கேட்டபோது சரியான தகவல் கூறவில்லை என தெரிகிறது.
போராட்டம்
இதைத்தொடர்ந்து அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் அம்பையில் உள்ள குடிநீர் தொட்டியில் ஏறிநின்று தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயர் அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
தற்கொலை மிரட்டல்
இந்நிலையில் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு சென்ற சகோதரர்கள் அங்குள்ள மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தனர்.
தகவல் அறிந்ததும் மாநகர துணை கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் வாசிவன் மற்றும் பாளை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.