விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.
- முதலாவதாக நடை பெற்ற சிறிய மாட்டு வண்டி போட் டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை கிராமத்தில் பெத்தனாச்சி அம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இதில் நெல்லை, தென்காசி, விருதுநகர்,தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டி வேம்பார் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.
சிறய மாட்டு வண்டி களுக்கு வெற்றி இலக்காக 10 கிலோமீட்டர் தூரமும், பெரிய மாட்டு வண்டிகளுக்கு 8 கிலோமீட்டர் தூரம் வெற்றி இலக்காகவும், பூஞ்சிட்டு மாட்டு வண்டிகளுக்கு 6 கிலோமீட்டர் தூரம் வெற்றி இலக்காகவும் நிர்ணயிக்கப்பட்டது.
முதலாவதாக நடை பெற்ற சிறிய மாட்டு வண்டி போட் டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடி யசைத்து தொடங்கி வைத்தார். இதில் 38 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
2-வது போட்டியாக பெரிய மாட்டு வண்டி பந்தயத்தை விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 14 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 3-வதாக பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 15 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
சிறிய மாட்டுவண்டி போட்டியில் முதல் பரிசை புதியம்புத்தூர் விஜயகுமார் மாட்டு வண்டியும், பெரிய மாட்டு வண்டியில் முதல் பரிசை கடுகுசந்தை மோகன் மாட்டு வண்டியும், பூஞ்சிட்டு பந்தயத்தில் கயத்தாறு சரவணன் மாட்டு வண்டியும் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளருக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்டது. விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று மாட்டு வண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர்.
நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்ன மாரி முத்து, வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல்,சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.