உள்ளூர் செய்திகள்

போலீசுக்கு தெரியாமல் புதைப்பு: விபத்தில் பலியான 4-ம் வகுப்பு மாணவன் உடல் தோண்டி எடுப்பு

Published On 2023-05-28 10:25 GMT   |   Update On 2023-05-28 10:25 GMT
  • மாணவனின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
  • டிராக்டர் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பார்த்திபனை போலீசார் தேடிவருகிறார்கள்.

திருவள்ளூர்:

பூந்தமல்லி அடுத்த சித்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் நித்திஷ் (வயது11). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் கடந்த 25-ந் தேதி காலை வீட்டின் அருகே உள்ள சிவன்கோவில் பகுதிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் மோதியதில் மாணவன் நித்திசின் உடல் இரண்டு துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுபற்றி போலீசுக்கு தெரிவிக்காமல் மாணவன் நித்தீசின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதைத்துவிட்டனர்.

இதுகுறித்து வெள்ளவேடு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாணவனின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து பூந்தமல்லி தாசில்தார் மாலினி மற்றும் வெள்ளவேடு போலீசார் சித்துக்காடு கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் மோதியதில் சிறுவன் நித்தீஷ் பலியானது தெரிய வந்தது. பின்னர் பூந்தமல்லி தாசில்தார் மாலினி, பூந்தமல்லி உதவி கமிஷனர் ஜவஹர், வெள்ளவேடு காவல் ஆய்வாளர் லில்லி, உதவி ஆய்வாளர் செந்தில் நாதன், வி.ஏ.,ஓ., பிரகாஷ் பாலாஜி மற்றும் வெள்ளவேடு போலீசார் அப்பகுதிக்கு சென்று புதைக்கப்பட்ட சிறுவன் நித்தீசின் உடலை தோண்டி எடுத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து மீண்டும் அதே இடத்தில் உடல் புதைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிராக்டர் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பார்த்திபனை போலீசார் தேடிவருகிறார்கள்.

Tags:    

Similar News