டி.ஐ.ஜி.யுடன் புஸ்சி ஆனந்த் சந்திப்பு: மாநாடு மாதிரி வரைபடத்தை அளிக்க அறிவுறுத்தல்
- தொண்டர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள்.
- பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின் பற்ற வேண்டும்.
விழுப்புரம்:
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து உள்ளார். இதற்கான கொடி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி. சாலையில் நடைபெற உள்ளது. இதற்காக இடங்கள் கையகப்படுத்த ப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் மாநாடு பணிகள் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று கட்சியின் உயர் மட்டக் குழு நிர்வாகிகள், மாநில பொது செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் மாநாடு பந்தல் அமைக்கும் பணியை பார்வையிட்டனர்.
பந்தல் அமைப்பாளர், பாதுகாவலர்கள், ஒளி, ஒலி அமைப்பாளர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
தமிழக வெற்றிக் கழக பொது செயலாளர் புஸ்சி ஆனந்த் நேற்று இரவு விழுப்புரத்தில் டி.ஐ.ஜி. திஷாமித்தல், போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் ஆகியோரை சந்தித்தார்.
அப்போது மாநாட்டுக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பிற்காக காவல் துறையினர் குறிப்பிட்டிருந்த முக்கிய நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதா, மாநாட்டிற்கான வரை படம் போன்றவற்றை அளிக்குமாறு போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கேட்டுள்ளனர்.
பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின் பற்ற வேண்டும் என டி.ஐ.ஜி. அறிவுறுத்தியதாக த.வெ.க.நிர்வாகிகள் தரப்பினர் தெரிவித்தனர்.