நாடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்
- தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது.
- இந்த முகாமில் 63 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு சளி பரிசோதனையும் செய்யப்பட்டது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தவெளி அம்பேத்கார் காலனியில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட நடமாடும் நுண் கதிர் எக்ஸ்ரே வாகனம் மூலம் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மற்றும் ஆணையாளர் வசந்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆத்தூர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயலட்சுமி(காசநோய்), இணை இயக்குனர் டாக்டர் கணபதி ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்த முகாமில் 63 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு சளி பரிசோதனையும் செய்யப்பட்டது. இந்த காசநோய் குறித்து இணை இயக்குனர் கணபதி பேசும்போது, 2 வாரம் சளி ,இருமல் பசியின்மை, மாலை நேர காய்ச்சல், உடல் எடை குறைதல், சளியுடன் ரத்தம் சேர்ந்து வருதல் உள்ளிட்டவை காச நோயின் அறிகுறிகள் ஆகும். காசநோய் முற்றி லும் குணமாக கூடிய நோயாகும். காசநோய் பரம்பரை நோய் அல்ல. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு எளிதில் நோய் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது.
எனவே இது போன்ற அறிகுறி உள்ள பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். முகாமில் வட்டார காச நோய் முது நிலை சிகிச்சை மேற்பார்வையாளர் வீரமணிகண்டன், சுகாதார பார்வையாளர் ஜெகதீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.