காரைக்காலில் மீனவ கிராமங்களுக்கு இடையேயான கார்னிவல் படகு போட்டி
- 2-ம் நாளான நேற்று, கபடி, கைபந்து, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
- 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 11 படகுகள் பங்கேற்றன.
புதுச்சேரி:
காரைக்காலில் 4 நாட்கள் நடைபெறும் கார்னிவல் திருவிழா நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான நேற்று, கபடி, கைபந்து, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து கார்னிவெல்லின் ஒரு பகுதியாக மீனவ கிராமங்களுக்கிடையே படகு போட்டி நடைபெற்றது. இந்த படகு போட்டியில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு, காளி குப்பம், மண்டபத்தூர், கீழக்காசாக்குடி மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 11 படகுகள் பங்கேற்றன. இப்போட்டியை காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் தொடங்கி வைத்தார். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட போட்டியில் முதல் இடத்தை காளிகுப்பம் மீனவர்களும், 2-ம் இடத்தை மண்டபத்தூர் மீனவர்களும், 3-ம் இடத்தை கீழக்காசாக்குடி மேடு மீனவர்களும் வெற்றி பெற்றார்கள். வெற்றி பெற்ற மீனவர்களுக்கு 18-ந் தேதி பரிசுகள் வழங்கப்படும் என கலெக்டர் முகமது மன்சூர் அறிவித்துள்ளார்.