புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
- மாநில அரசுகளின் ஆலோசனைகளை பெறவில்லை.
- சட்டங்களை சமஸ்கிருத மயமாக்கி உள்ளனர்.
சென்னை:
இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷைய அதினியம் என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த புதிய சட்டங்கள் கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
இந்த புதிய சட்டங்களை எல்லாம் எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்தநிலையில், இந்த சட்டங்களை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட் டில், தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்றத்துக்குள் கண்ணீர் புகை குண்டு வீசிய சம்பவத்தை கண்டித்ததால், இரு சபைகளில் இருந்தும் 150 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அந்த காலக்கட்டத்தில், எந்த ஒரு விவாதமும் இல்லாமல் இந்த 3 சட்டங்களை அவசர கதியில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய சட்டங்களை இயற்றுவதற்கு முன்பு மாநில அரசுகளின் ஆலோசனைகளை பெறவில்லை. சில பிரிவுகளை மாற்றம் செய்து, சட்டங்களை சமஸ்கிருத மயமாக்கி உள்ளனர். இது பல தரப்பினருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில், அரசு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை குற்றமாக்கியுள்ளது. குற்றங்களுக்கு தண்டனைகளை அதிகரித்துள்ளது. ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் எனக் கூறியுள்ளதன் மூலம், தண்டனை குறைப்பு வழங்கும் ஜனாதிபதி, கவர்னர் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளது.
பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தில், போலீசாருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. கொலை, ஆசிட் வீச்சு வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களுக்கு கைவிலங்கு பூட்டுவதன் மூலம் தனிநபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது.
எனவே, ஏராளமான முரண்பாடுகளுடன் இயற்றப்பட்டுள்ள இந்த 3 சட்டங்களை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, அரசியலமைப்பு சட்டப்படி ஆங்கிலத்தில் மட்டுமே சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு சமஸ்கிருதத்தில் சட்டங்களை நிறைவேற்றியது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என வாதிட்டார்.
இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுத்தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஸ் விவேகானந்தன் ஆகியோர் கால அவகாசம் கேட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
மேலும், ''மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. சிவில் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த போதும் இதேபோல எதிர்ப்பு இருந்தது. எனவே, சட்டத்தை இயற்றுவதற்கு முன்பு சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும்'' என்று கருத்து தெரிவித்தனர்.