காவிரியில் வெள்ளப்பெருக்கு விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்
- நேற்று முதல் இப்பகுதியில் இயக்கப்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்தினை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
- மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையிலிருந்து அதிகப்படியான உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி:
எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை நீர்த்தேக்கத்தில், நீர் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கதவணை நீர்ப்பரப்பில், சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்ட பகுதியான நெருஞ்சிப்பேட்டைக்கு இடையே, இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையிலான விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இதனை இரு மாவட்டங்களையும் சேர்ந்த அரசு அலுவலர்கள், மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பயன்படுத்தி வந்த நிலையில், அண்மையில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையிலிருந்து அதிகப்படியான உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் பூலாம்பட்டி கதவனை பகுதியில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், பயணிகளின் பாதுகாப்பினை கருதி நேற்று முதல் இப்பகுதியில் இயக்கப்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்தினை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனால் மறுகரைக்கு செல்ல சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றி கோனேரிப்பட்டி கதவனை பாலம் வழியாக பயணிகள் ஆற்றினை கடந்து வருகின்றனர். வெள்ள அபாயம் குறையும் வரை தொடர்ந்து விசைப்படகு போக்குவரத்து நடைபெறாது எனவும், அதுவரை பயணிகள் பரிசல் மற்றும் இதர பயன்பாட்டின் மூலம் ஆற்றினை கடக்க முயற்சிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.