காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: கரையோர பகுதி மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
- மேட்டூா் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- எனவே, காவிரி கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக்–குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேட்டூா் அணையின் நீா்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால், அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அணையில் இருந்து கூடுதலாக காவிரி ஆற்றில் நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. எனவே, காவிரி கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்.
பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீா்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல், துணி துவைத்தல் மற்றும் சுயபடம் எடுத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றில் நீராடுதல் உள்ளிட்ட எந்தவித செயல்களிலும் ஈடுபடக் கூடாது. அதனை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து பொது–மக்களுக்கு தெரிவிக்கப்படும்.
அவசர உதவிக்கு 1077, காவல் துறை 100, தீயணைப்புத் துறை 101, மருத்துவ உதவி 104, ஆம்புலன்ஸ் 108 என்ற எண்களிலும், குமார–பாளையம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், மோகனூா் வட்டாட்சியா்களையும் தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.