உள்ளூர் செய்திகள்

நம்பகத்தன்மையற்ற நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்-டாக்டர் ராமதாஸ்

Published On 2024-08-02 06:57 GMT   |   Update On 2024-08-02 06:57 GMT
  • நீட் தேர்வு மாணவர்களின் உண்மையான திறனை வெளிக்கொண்டு வருவதில்லை.
  • நீட் தேர்வை நடத்துவதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் 720-க்கு 705 (98 சதவீதம்) மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவி ஒருவர், அம்மாநில தேர்வு வாரியம் நடத்திய 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வை இரு முறை எழுதியும் வெற்றி பெற முடியாமல் தோல்வி அடைந்துள்ளார். நீட் தேர்வு மாணவர்களின் உண்மையான திறனை வெளிக்கொண்டு வருவதில்லை என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது.

கடந்த மாதம் நடத்தப்பட்ட துணைத் தேர்வுகளை மீண்டும் எழுதிய அந்த மாணவி வேதியியல் பாடத்தில் சரியாக 33 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார். ஆனால், இயற்பியல் பாடத்தில் 22 மதிப்பெண்களை மட்டுமே எடுத்த அந்த மாணவி மீண்டும் தோல்வி அடைந்துள்ளார்.

கடினமான நீட் தேர்வில் 98 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த மாணவி, மிகவும் எளிதான 12-ம் வகுப்புத் தேர்வில் 33 மதிப்பெண்களைக் கூட எடுக்க முடியவில்லை என்பதில் இருந்து நீட் தேர்வை நடத்துவதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

எனவே நம்பகத்தன்மை யற்ற நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News