மக்களை பாதுகாக்கும் கடமையில் மத்திய பா.ஜ.க., அரசு தவறி விட்டது- எஸ்.டி.பி.ஐ., மாநில தலைவர் குற்றச்சாட்டு
- பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோா் பதவி விலக வேண்டும்.
- இந்திய நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளின் கேள்விக்கு அச்சப்பட்டு பிரதமா் வர மறுக்கிறாா்
திருப்பூர்:
திருப்பூா் காங்கயம் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் எஸ்.டி.பி.ஐ., கட்சி சாா்பில் தலைவா்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் நிருபர்களிடம் கூறியதாவது: -
இந்தியா கூட்டணி பா.ஜ.க., அரசை எதிா்க்கின்ற அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து செல்வதற்கான பணிகளை வரும் காலங்களில் மேற்கொள்வாா்கள் என எதிா்பாா்க்கிறோம். மக்களை பாதுகாக்கின்ற கடமையில் மத்திய பா.ஜ.க., அரசு தவறிவிட்டது.
கடந்த 3 மாதங்களாக மணிப்பூரில் நடைபெறும் வன்முறை சம்பவம் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது. ஆனால் இந்திய நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளின் கேள்விக்கு அச்சப்பட்டு பிரதமா் வர மறுக்கிறாா்.
மணிப்பூரை தொடா்ந்து ஹரியாணா, மகாராஷ்டிரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் வன்முறைகளை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. எனவே, பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோா் பதவி விலக வேண்டும்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் 1½ வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட நிலையில் அந்த குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதோடு, ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.