சென்னை மெரினா கடற்கரை புதுப்பொலிவுடன் மாறுகிறது
- பாரம்பரிய கட்டிடங்களில் ஒளி அலங்காரம் அமைக்கவும் முடிவு.
- சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக மாற்றப்பட உள்ளது.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இந்த நிலையில் மெரினா கடற்கரை அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக மாற்றப்பட உள்ளது.
இதற்காக சென்னை சாந்தோம் பேராலயத்தில் இருந்து நேப்பியர் பாலம் வரை சுமார் 4 கி.மீ தொலைவுக்கு மெரினா கடற்கரை புதுப்பொலிவு பெறுகிறது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தற்போது மெரினா கடற்கரையையும் அதன் மேற்கு பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க பாரம்பரிய கட்டிட ங்களையும் இணைக்கும் வகையில் காமராஜர் சாலை நடைபாதையை மேம்படுத்தும் திட்டத்தை ரூ.10 கோடி செலவில் தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் சென்னை பல்கலைக்கழகம், சாந்தோம் பேராலயம், பொது பணித்துறை அலுவலக கட்டிடம், விவேகானந்தர் இல்லம், மாநில கல்லூரி உள்ளிட்ட பாரம்பரிய கட்டிடங்கள் பராமரிக்கப்பட உள்ளன.
மேலும் மெரினா கடற்கரையில் புதுப்பொலிவான தோட்டங்கள், நீரூற்றுகள், சிற்ப தோட்டங்கள் போன்றவை அமைக்கப்படுகின்றன.
மேலும் அகலமான நடைபாதைகள், சுற்றுலாப் பயணிகள் அமரும் பகுதிகள், தகவல் பலகைகள் அமைக்கப்பட உள்ளன.
மேலும் மோட்டார் அல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை மெரினா கடற்கரை சாந்தோம் பேராலயத்தில் இருந்து நேப்பியர் பாலம் வரை சுமார் 4 கி.மீ தொலைவுக்கு புதுப்பொலிவுடன் மாற்றப்பட உள்ளது. மெரினா கடற்கரை பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய கட்டிடங்களையும் பராமரித்து பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பாரம்பரிய கட்டிடங்களில் ஒளி அலங்காரம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த பணிகள் முடிவடைந்து மெரினா கடற்கரை புதுப்பொலிவுடன் மாற்றப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.