உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: இந்து சமய அறநிலையத்துறை இடையூறு செய்வதை தவிர்க்க வேண்டும் - தீட்சிதர்கள் விசாரணை அதிகாரிக்கு கடிதம்

Published On 2022-06-29 07:53 GMT   |   Update On 2022-06-29 07:53 GMT
  • சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: இந்து சமய அறநிலையத்துறை இடையூறு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று தீட்சிதர்கள் விசாரணை அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
  • 17 வருட காலதாமதம் பற்றி எந்தவித விளக்கமும் இல்லை.

கடலூர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலின் பொது தீட்சிதர்களின் செயலாளர் ஹேமசபேசதீட்சிதர், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையரும், விசாரணை அதிகாரியுமான ஜோதிக்கு அனுப்பியுள்ள பதில் கடித விபரம் வருமாறு:-

நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் 28.06.2022 அன்று 17 பக்க பதில் கடிதம் அனுப்பியுள்ளோம். அந்த பதிலில் இந்திய அரசியல் சாசனப் பிரிவு 25,26, 29/1, 31-A (1)(b), மற்றும் பிரிவு 394(A) ஆகியவற்றை மேற்கோள் காட்டி நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் தனி சமயப் பிரிவினர் மற்றும் அவர்களது பூஜை முறைகள் தனித்துவம் வாய்ந்தது என்பதையும் குறிப்பிட்டு உச்சநீதிமன்ற 06.01.2014 தீர்ப்பின்படி பொது தீட்சிதர்களின் வழிபாட்டு முறைகள் மற்றும் நிர்வாகத்தில் இந்து அறநிலையத் துறை சட்டத்தின் படி எந்தவித நடவடிக்கையும் ஆய்வும் உட்படுத்த சட்டத்தில் வழியில்லை என்பதை தெரிவித்தார்கள்.

மேலும், இந்து அறநிலையத்துறை செயலாளர், உச்ச நீதிமன்றத்தில் நீதிப்பேராணைகள் 544/2009 மற்றும் 476/2012 ஆகியவற்றில் தாக்கல் செய்த உறுதி மொழி பத்திரத்தில் இந்து அறநிலைய சட்டப்பிரிவு 107ன் படி பொருந்தாது அரசியல் சாசனப்பிரிவு 26-ன் கீழ் பாதுகாப்பு பெற்ற தனி சமயப்பிரிவினரின் நிர்வாகத்தின் மற்ற பிரிவுகள் பொருந்தாது என்று குறிப்பிட்டுள்ளதால் அதற்கு மாறாக தற்போது இந்து அறநிலையத்துறை தனி சமயப்பிரிவான பொது தீட்சிதர்களின் நிர்வாகத்தில் ஆய்வு செய்ய இந்து அறநிலைய சட்டத்திற்கு வழி முறை உள்ளது என்று கூறுவது சட்டப்படி தவறு என்றும், நீதிமன்றத்தில் தண்டணைக்குரிய செயல். மேலும் இந்த அறநிலையத் துறை சென்னை உயர்நீதி மன்ற நீதிப்பேராணை எண். 9594/2004ல் ஆ.மி.வைத்தீஸ்வரன் கோயில் தேவஸ்தான வழக்கில் சிதம்பரம் கோயில் தனி சமயப்பிரிவினால் நிறுவப்பட்டது என்பதை எந்தவித சந்தேகத்திற்கு இடமின்றி தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

இவ்வாறு இந்து அறநிலைய சமயத்துறையினராலேயே தனி சமயப்பிரிவு கோயில் என்று ஒப்புக் கொண்ட பிறகு தற்போது ஸ்ரீ சபாநாயகர் கோயிலில் மீண்டும் மீண்டும் இந்து அறநிலைய துறை சட்டப்படி ஆய்வு நடத்த வழியுள்ளது என்று கூறுவது சட்டப்படி தவறானது. இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் உள்ள நிர்வாக சீர்கேடு மற்றும் நிதிமுறைகேடுகளை முதலில் சரி செய்த பிறகு தான் நடராஜர் கோயில் நிர்வாகத்தை பற்றி கேள்வி கேட்கும் தார்மீக உரிமை இந்து அறநிலையத்துறைக்கு ஏற்படும். 2005-ல் நடைபெற்ற நகை சரிபார்ப்பு அறிக்கை தற்போது நடந்த ஆய்வின் போது பொது தீக்ஷிதர்கள் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொண்டதின் பேரில் தான் 17 வருடம் கழித்து சரிபார்ப்பு அறிக்கையை இந்து அறநிலையத் துறை அளித்துள்ளது.

17 வருட காலதாமதம் பற்றி எந்தவித விளக்கமும் இல்லை. 17 வருடம் கழித்து அளிக்கப்படும் அறிக்கை நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. கோவில் நிலங்கள் தனி வட்டாட்சியரின் கட்டுப்பாட்டில் உள்ளதற்கு ஆய்வு நடத்தியதற்கு எந்தவித தகவலும் பொது தீட்சிதர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. கோயில் நிலங்களின் குத்தகை வசூல் செய்வதில் உள்ள குறைபாடுகள் பற்றியும் இந்து அறநிலையத்துறை எடுத்த நடவடிக்கை பற்றியும் பொது தீட்சிதர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. தற்போது ஆனி மாத உற்சவம் நடைபெறுவதால் பொது தீட்சிதர்கள் உற்சவ நடவடிக்கைகளில் முழுவதுமாக தங்களை அர்பணித்துள்ளதால், சரிபார்ப்பு அறிக்கை பற்றிய கருத்து தெரிவிக்க கால அவகாசமும் பொது தீட்சிதர்கள் சார்பில் கோரப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News