புதுச்சேரி அமைச்சர்கள் இலாகாக்களை மாற்ற முதலமைச்சர் ரங்கசாமி திட்டம்?
- அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை.
- புதிய அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்க காலதாமதம்.
புதுச்சேரி:
புதுச்சேரி அமைச்சரவை யில் இடம் பெற்றிருந்த ஒரே பெண் எம்.எல்.ஏ.வான சந்திரபிரியங்கா, கடந்த அக்டோபர் மாதம் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
இதன் பிறகு புதிய அமைச்சராக காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்த வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன், கடந்த மார்ச் 14-ந்தேதி அமைச்சராக பொறுப்பேற்றார். வழக்க மாக அமைச்சர் பதவியேற்பு முடிந்ததும், அவருக்கான இலாகா ஒதுக்கப்பட்டு விடும்.
ஆனால், திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது. இதனிடையே மார்ச் 16-ந்தேதி பாராளு மன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிகள் அமலானது. இதனால் அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை. இலாகா இல்லாத அமைச்சராக திருமுருகன் கடந்த 3 மாதங்களாக வலம் வருகிறார்.
தேர்தல் முடிவு கடந்த ஜூன் 4-ந்தேதி வெளி யானது. இதைத்தொடர்ந்து நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை இலாகா ஒதுக்கப்படவில்லை. தனி தொகுதி எம்.எல்.ஏ.வான சந்திரபிரியங்கா ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.
பொதுவாக ஆதிதிராவி டர் நலத்துறை அந்த சமூகத்தை சேர்ந்தவருக்கே ஒதுக்கப்படும். ஆனால், புதிய அமைச்சர் திருமுருகன் அந்த சமூகத்தை சேர்ந்தவரில்லை. எனவே, அந்த இலாகா முதல்-அமைச்சர் ரங்கசாமி தன்வசம் வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது அந்த சமூகத்தை சேர்ந்த பா.ஜனதா அமைச்சர் சாய் ஜெ. சரவணன்குமாரிடம் வழங்க வேண்டும்.
இதனால், அமைச்சர்களின் இலாகாக்களை மாற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனாலேயே புதிய அமைச்சர் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.