கோவை மாவட்டத்தில் 859 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்
- கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார்.
- நகராட்சி பகுதிகளில் ஒரு இடத்தில் சமைத்து அந்த பகுதிகளில் உள்ள 15 பள்ளிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கோவை,
கோவை மாவட்டத்தில் 121 மாநகராட்சி பள்ளிகள், மதுக்கரை நகராட்சியில் 4 பள்ளிகள், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 11 பள்ளிகள் என மொத்தம் 136 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கோவை மாவட்டத்தில் கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 5 நகராட்சிகள் மற்றும் 15 வட்டாரங்களில் உள்ள 859 பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 44,358 மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கோவை மாவட்டத்தில் கிணத்து க்கடவு பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 136 பள்ளிகளில் 17,621 குழந்தைகள் உணவு அருந்தி வருகிறார்கள். தற்போது 2-வது கட்டமாக மேலும் கூடுதலாக 859 பள்ளிகளில் 44,538 குழந்தைகள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகப்பட்டி ணத்தில் இன்று தொடங்கி வைத்தார். அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் படி அனைத்து குழந்தைகளுக்கு காலை உணவு பள்ளிகளிலேயே கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நகராட்சி பகுதிகளில் ஒரு இடத்தில் சமைத்து அந்த பகுதிகளில் உள்ள 15 பள்ளிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மலை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அந்த பள்ளிகளிலேயே உணவு சமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதனை கண்காணிக்க 15 பள்ளிகளுக்கு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஒரு செயலி மூலமாக எப்போது சமையல் தொடங்கியது, சாப்பாடு வழங்கும் நேரம், எத்தனை பேருக்கு சாப்பாடு வழங்கப்பட்டது என்ற எல்லா விபரங்களும் சேகரிக்கப்படும். பள்ளிக் கல்வித்து துறை மற்றும் மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அவ்வபோது ஆய்வு செய்து உணவின் தரம் எப்படி உள்ளது? என்பதை கண்காணிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பொள்ளாச்சி தொகுதி எம்.பி. சண்முகசுந்தரம், கிணத்துக்கடவு பேரூராட்சி கதிர்வேல், உதவி கலெக்டர் (பயிற்சி) ஆஷிக் அலி ஆகியோர் பங்கேற்றனர்.