இறந்தவர் உடலை வயலில் இறங்கி சுமந்து செல்லும் பொதுமக்கள்
- உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் கைபம்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
- வேறு இடத்தில் தங்களுக்கு மயானம் அமைத்து தர வேண்டும்.
பூதலூர்:
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே கோவில்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கைசமுத்திரம் குடியிருப்பில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மயானம் வயல்களுக்கு நடுவில் அமைந்துள்ளது.
புல்பூண்டுகள் சூழ்ந்துள்ள இந்த இடத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தின் சார்பில் கைபம்பு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த மயானத்தில் அடக்கம் செய்ய மூன்று சிறு வாய்க்கால்கள், பயிர் செய்யப்பட்டு உள்ள பயிர்களின் ஊடாக இறந்தவர்களின் உடல் வைக்கப்பட்ட பாடையை சுமந்து வரவேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்த ஒரு பெண்ணின் உடலை பாடையில் வைத்து உறவினர்கள் வளர்ந்த நெல் பயிரின் ஊடாக தடுமாறி சுமந்து வந்தனர்.
மற்றவர்கள் வரப்புகளில் நடந்து வந்தனர்.
மயானம் உள்ளதாககூறப்படும் இடத்திற்கு வந்ததும் பாடையை இறக்கி வைத்து அடக்கம் செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
வயல்களுக்கு நடுவில் உள்ள மயானத்துக்கு பதில் வேறு இடத்தில் தங்களுக்கு மயானம் அமைத்து தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
எனவே இனியாவது மயானத்துக்கு வேறு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி உள்ளனர்.