புத்தக திருவிழாவின் 4-ம் நாளான இன்று மாணவ-மாணவிகளுக்கு மண்பானையில் ஓவியம் வரையும் பயிற்சி
- புத்தக கண்காட்சியை தினமும் ஏராளமானவர்கள் பார்வையிட்டு செல்கின்றனர்
- வருகிற 2-ந்தேதி பாட்டிலில் ஓவியம் வரைதல்,பல்வேறு கைவினை பொருட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நெல்லை:
பாளை வ.உ.சி. மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.
பயிற்சி பட்டறை
தினமும் ஏராளமானவர்கள் புத்தக கண்காட்சியை பார்வை யிட்டு செல்கின்றனர். கடந்த 3 நாட்களாக மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்தும் கொடுத்து நிகழச்சிகள் நடத்தப்பட்டது. அவர்களுக்கு சிறப்பு அரங்குகளும் அமைக்கப் பட்டிருந்தது.
4-ம் நாளான இன்று பல்வேறு துறைகள் சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகளுக்கு மண்பானையில் ஓவியம் வரையும் பயிற்சி வழங்கப்பட்டது.
கண்ணாடியில் ஓவியம்
இதில் ஏராளமான பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். வருகிற 2-ந்தேதி பாட்டிலில் ஓவியம் வரைதல், அதனை தொடர்ந்து கண்ணாடியில் ஓவியம் வரைதல், சணல் பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு கைவினை பொருட்கள் பயிற்சி தினமும் அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே தொடர் வாசிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் இன்று கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு புத்தகங்களை வாசித்தனர்.