கோவையில் சர்க்கசில் இருந்து மீட்கப்பட்ட கொண்டை கிளிகளுக்கு குன்னூரில் சிகிச்சை
- புகாரின்பேரில் போலீசார் சர்க்கஸ் அரங்குக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
- 2 கொண்டைக்கிளிகளும் அருவங்காடு மையத்தில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கோவை,
கோவை வ.உ.சி மைதானத்தில் கடந்த மாதம் 23-ந்தேதி முதல் சர்க்கஸ் நடந்து வருகிறது. இங்கு வளர்ப்பு பறவைகளின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் கோவை சர்க்கசில் உள்ள கிளிகளுக்கு சரிவர உணவுகள் வழங்கப்படுவது இல்லை என்று கால்நடை ஆர்வலர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் போலீசார் சர்க்கஸ் அரங்குக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு உலகில் மிகவும் அரிய பறவை என்று கருதப்படும் ஆப்பிரிக்கன் எல்லோ காக்கடூ வகையை சேர்ந்த 2 கொண்டை கிளிகள் இருப்பது தெரிய வந்தது.
ஆனால் இதற்கு சர்க்கஸ் நிர்வாகிகளிடம் உரிய பதிவுச்சான்று ஆவணங்கள் இல்லை. எனவே 2 கொண்டை கிளிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அந்த பறவைகள் நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அருவங்காடு கால்நடை மருத்துவ சேவை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு முதன்மை டாக்டர் சுமன் தலைமையிலான மருத்துவ குழுவினர் உரிய சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு மேற்கண்ட 2 கொண்டைக்கிளிகளும் அருவங்காடு மையத்தில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், ஆப்பிரிக்கன் எல்லோ காக்கடூ இனத்தை சேர்ந்த கொண்டை கிளிகள் புத்திசாலித்தனம் மிகுந்தவை. எனவே அவற்றை சர்க்கஸ் உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
கொண்ைடக்கிளிகள் மார்க்கெட் சந்தையில் ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இதனை வளர்க்க உள்ளூர் வனத்துறை அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.