உடன்குடி வட்டார பகுதியில் பருவ மழை பொய்த்ததால் தென்னை மரங்கள் கருகின- விவசாயிகள் கவலை
- கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்யாததின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டது.
- பல ஆண்டுகளாக பார்த்து பார்த்து வளர்த்த தென்னை மரம் தற்போது கருகி அழிந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
உடன்குடி:
உடன்குடி வட்டாரப் பகுதியில் அனைத்து தாப்பு மக்களும் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறார்கள்.
தென்னை மரங்கள்
ஆனால் சமீபகாலமாக பருவம் தவறி பெய்தமழை, பருவகாலங்களில் பொய்யாத மழை உள்ளிட்வைகளினால் ஏற்பட்ட வறட்சியால் உடன்குடி பகுதிகளில் தென்னை, பனை உள்ளிட்ட விவசாயம் வெகுவாக குறைந்துவிட்டது.
கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்யாததின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டது. ஆண்டுக்கு ஆண்டு பருவமழை குறைவால் இப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பவில்லை. இதனால் ஏராளமான தோட்டங்களில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தென்னை மரங்கள் கருகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
குறிப்பாக மெஞ்ஞான புரம், உடன்குடி, பரமன் குறிச்சி பகுதிகளில் ஏராள மான தென்னை மரங்கள் கருகி சாய்ந்து கொண்டி ருக்கிறது. பல ஆண்டுகளாக பார்த்து பார்த்து வளர்த்த தென்னை மரம் தற்போது கருகி அழிந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை
எனவே மாவட்ட நிர்வாகமும், அரசும் தக்க நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், வருங்காலங்களில் நீர் மேலாண்மையில் பல நல்ல திட்டங்களை வகுத்து மழைக்காலங்களில் தண்ணீர் தேக்கி வைத்து நிலத்தடி நீரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.