சீர்காழி உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு
- காய்கறிகளின் விலை விபரங்களை வியாபாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
- தானியங்கி வானிலை ஆய்வு மையத்தை ஆய்வு செய்தார்.
சீர்காழி:
சீர்காழி வட்டத்திற் குட்பட்ட வைத்தீஸ்வரன் கோயில், எடக்குடி வடபாதி, தென்னலக்குடி, கடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மை , உழவர் நலத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் வேளாண் பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வைத்தீஸ்வரன்கோயில் துணை வேளாண் விரிவாக்க மையத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு விதை இருப்பு விவரங்களை கேட்டறிந்தார். விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் இடுபொருட்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளனவா என வேளாண்மை துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, வைத்தீஸ்வரன் கோயில் விதை சுத்திகரிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு விதை சுத்திகரிப்பு பணியினை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஏதுவாக தரமான விதைகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்தார்.
பின்னர் எடக்குடி வடபாதி கிராமத்தில் விவசாயி ஒருவர் பயிரிடப்பட்டுள்ள பருத்திக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியினை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் மற்றும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையுமா என்பதனை வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, தென்னலக்குடி கிராமத்தில் தானியங்கி வானிலை ஆய்வு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீர்காழியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையினை நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் மற்றும் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காய்கறிகளின் விலை விபரங்கள் வியாபாரிகளிடம் கேட்டறிந்தார். உழவர் சந்தை முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பதனையும் ஆய்வு செய்தார். மேலும் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழிசை மூவர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இவ்வாய்வின்போது, வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், துணை இயக்குனர் (வேளாண் வணிகம்); வெற்றிவேலன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் , வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன், தோட்டக்கலைத்துறை குமரேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.