உள்ளூர் செய்திகள்

பல்லடம் ஆழ்துளை கிணறுகளில் பெட்ரோல் நிறத்தில் வரும் தண்ணீரால் பொதுமக்கள் அதிர்ச்சி

Published On 2024-06-14 09:15 GMT   |   Update On 2024-06-14 09:15 GMT
  • நிலத்தடி நீர் நிறம் மாறி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • ஏராளமான சாய ஆலை தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக ஆழ்துளை கிணற்றில் இருந்து வரும் தண்ணீர் நிறம் மாறி பெட்ரோல் நிறத்தில் நுரையுடன் வெளி வருகிறது. ஆழ்துளை கிணறு அமைத்து அதில் கிடைக்கும் தண்ணீர் மூலம் விவசாயம் மற்றும் அன்றாட பயன்பாட்டுக்கு அப்பகுதி விவசாயிகள்- பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நிலத்தடி நீர் நிறம் மாறி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறியது:- கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்டது லட்சுமி நகர், அபிராமி நகர். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான சாய ஆலை தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. மழை பெய்யும் போது சாய கழிவுநீரை நேரடியாக திறந்து விடுகின்றனர். இதன் காரணமாக ஆழ்துளை கிணறு தண்ணீர் மாசடைந்து நிறம் மாறி வருகிறது. அதனை பயன்படுத்திய சிலருக்கு சரும நோய்கள் ஏற்பட்டுள்ளது. எனவே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சாய ஆலை கழிவு நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News