சிறுமிக்கு பாலியல் தொல்லை- கட்டிடத் தொழிலாளி கைது
- குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
- போக்சோ சட்டத்தின்கீழ் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பேரூர்:
கோவை பேரூர் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 45), கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் செல்வகுமார் சம்பவத்தன்று குடி போதையில் வீட்டுக்கு வந்தார்.
அப்போது அங்குள்ள தெருவில் 7 வயது சிறுமி விளையாடிக்கொண்டு இருந்தார். அந்த சிறுமிக்கு சாக்லெட் தருகிறேன் என்று கூறி தனது வீட்டுக்கு கூட்டி சென்றார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லை. தொடர்ந்து சிறுமியை படுக்கை அறைக்கு அழைத்து சென்ற செல்வகுமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து அந்த சிறுமி வீட்டுக்கு சென்று தாயிடம் நடந்த விவரங்களை தெரிவித்து உள்ளார்.
இதனை கேட்ட பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் செல்வகுமாரின் வீட்டுக்கு திரண்டு சென்றனர். ஊர்மக்கள் திரண்டு வருவதை பார்த்ததும் அவர் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்குள் பதுங்கினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராமத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது செல்வகுமார் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் செல்வகுமாரை சுற்றி வளைத்து பிடித்து பேரூர் போலீஸ் நிலையத்துக்கு கூட்டி சென்றனர்.
அந்த நேரத்தில் அங்கு போலீஸ் உயர் அதிகாரிகள் யாரும் இல்லை என்று தெரிகிறது. மேலும் பேரூர் போலீசார் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்வதில் தயக்கம் காட்டினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராமத்தினர் பேரூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இன்று அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.