திருப்பூர் அருகே வெறி நாய் கடித்து கட்டிட தொழிலாளி பலி
- கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மைசூரில் நாய் ஒன்று கடித்து விட்டது என்று கூறியுள்ளார்.
- சிகிச்சையில் இருந்த முனுசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், உப்பு பாளையம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 45). கர்நாடக மாநிலம் மைசூரில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அவரை நாய் கடித்துள்ளது. ஆனால் அதற்கு சிகிச்சை பெறாமல் முனுசாமி இருந்து விட்டார்.
இந்தநிலையில் வெள்ளகோவிலுக்கு வந்த அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். அப்போது டாக்டர், உங்களை ஏதேனும் நாய் கடித்து உள்ளதா? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மைசூரில் நாய் ஒன்று கடித்து விட்டது என்று கூறியுள்ளார். உடனே அவரை கரூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், திருச்சியில் உள்ள நாய் கடி சிறப்பு பிரிவுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த முனுசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
முனுசாமி நாய் கடித்து உயிரிழந்ததை தொடர்ந்து அவரது குடும்பத்தினரை வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் கதிரவன் மேற்பார்வையில் சுகாதார அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.