உள்ளூர் செய்திகள்

திருவாரூரில் கோடை வெயில் தாக்கம் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் கோடை வெயில் தாக்கம் குறித்த ஆலோசனை கூட்டம்

Published On 2023-04-22 10:03 GMT   |   Update On 2023-04-22 10:03 GMT
  • கோடை காலம் முடியும் வரை பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • மண்ணெண்ணை விளக்குகளை கவனமாக கையாள வேண்டும்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் கோடை வெயில் தாக்கம் குறித்து அனைத்து தரப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

கோடைவெயில் வெப்பம் 21.4.23 முதல் 24-ந்தேதி வரை 4 நாட்களுக்கு கூடுதலாக 4 சதவீதம் அதிகரிக்க கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புக்களை தடுக்க செய்ய வேண்டியவை, வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகளாக உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும் வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும்.

ஒ.ஆர்.எஸ். எலுமிச்சை ஜீஸ், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும்.

பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும்.

முடிந்தவரை குழந்தைகள், முதியோர்கள் வெயில் நேரத்தில் வெளியில் வருவதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும்.

கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போடவேண்டும். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம், பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீர் கொடுக்க வேண்டும்.

மேலும், பருவநிலை மாற்றங்களினால் இந்தாண்டு கோடை வெயில் துவக்கத்திலேயே வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் ஒயர்கள் உருகி சார்ட்சர்க்யூட் ஏற்பட்டு அதில் ஏற்படும் தீப்பொறியினால் கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.

மேலும், மாடி வீடுகளில் மேல் கூரையில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே மேல்புறம் உள்ள இரும்புகள் சூடாகி மின்விசிறி, டியூப்லைட் கழன்று கீழே விழும் தன்மையை பெறுகின்றன.

எனவே, கோடை முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன் கூரை வீடுகளில் வசிப்பவர்கள் தண்ணீரை வைத்து கொள்ளலாம். விலை உயர்ந்த பொருட்கள், நில ஆவணங்கள் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.

கேஸ் சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது.

விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும்.

மண்ணெண்ணை விளக்குகளை கவனமாக கையாள வேண்டும். கோடை வெயிலின் தாக்கத்தினை குறைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பணியினை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியர்கள் திருவாரூர் சங்கீதா, மன்னார்குடி.கீர்த்தனா மணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News