காரமடை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்
- காரமடை நகராட்சியில் மாதாந்திர கூட்டம் தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் நடந்தது.
- இந்த கூட்டத்தில் 57 தீர்மானங்கள் மன்றத்தின் முன் வைக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில் மாதாந்திர கூட்டம் தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் நடந்தது. கமிஷனர் பால்ராஜ், துணைத் தலைவர் மல்லிகா ஜெயப்பிரகாஷ், பொறியாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தனர்.
இதனை தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசினர்.
1-வது வார்டு பிரியா (கம்யூ): எனது வார்டில் சேரன் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளுக்குள் கழிவு நீர் செல்கிறது. அதற்கு தீர்வுகாண வேண்டும்.
7-வது வார்டு ரங்கசாமி (தி.மு.க), நேரு நகரில் போர்வெல் பழுதாகி உள்ளது. எனவே புதிய போர்வெல் அமைக்க வேண்டும்.
5-வது வார்டு ரவிக் குமார்(தி.மு.க), பொன்விழா நகரில் வீட்டுமனைக்கு அனுமதி இல்லாமல் குடியிருப்புகள் கட்டப்படுகிறது. இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும்.
9-வது வார்டு பிரியா (தி.மு.க), ராயல் கார்டன், முல்லை நகர், காமராஜர் நகர் பகுதியில் குடிநீர் விஸ்தரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
21-வது வார்டு விக்னேஷ், (பாஜக),காரமடை நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மின்மயானத்தில் ஆம்புலன்ஸ் இருந்தும் வாடகை வாகனத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
உடனடியாக இந்த ஆம்புலன்ஸ் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மின்மாயானம் மாலை 7 மணிவரை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
24-வது வார்டு ராமமூர்த்தி (திமுக),பெரியார் நகரில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இவர்கள் பாலம் வசதி இல்லாததால் கழிவுநீரில் நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணியும் முறையாக நடக்கவில்லை. தனியார் ஒப்பந்ததாரர் குடியிருப்புவாசிகளிடம் இணைப்பிற்கு ரூ.15 ஆயிரம் வாங்கி உள்ளனர். ஆனால் தண்ணீர் 3 முதல் 4 குடம் மட்டுமே வருகிறது.
வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விடும்போதும் ஒப்பந்த குழுவினருக்கு தெரியாமல் டெண்டர் விட கூடாது என பேசினார்.இதற்கு பதில் அளித்த கமிஷனர் பால்ராஜ், ரூ.25 ஆயிரத்திற்குட்பட்ட பணிகளுக்கு மட்டுமே பணிகளை பிரித்து கொடுப்பதில் முடிவு செய்யும் உரிமை ஒப்பந்த குழுவினருக்கு உண்டு. அதற்கு மேல் மதிப்பில் உள்ள பணிகளுக்கு ஒப்பந்த குழுவுக்கு உரிமை இல்லை என்றார்.
துணைத்தலைவர் மல்லிகா ஜெயப்பிரகாஸ் (காங்கிரஸ்)- எனது வார்டுக் குட்பட்ட குடிநீருக்கு போர்வெல் அமைக்காததால் வீடுகளில் கருப்பு கொடி கட்டுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும்.இதேபோன்று 13-வது வார்டு கண்ணப்பன் (தி.மு.க), 27-வது வார்டு வனிதாசஞ்ஜீவ்காந்தி (அ.தி.மு.க), 2-வது வார்டு குருபிரசாத், 17-வது வார்டு மலர்கொடி (தி.மு.க), தியாகராஜன்(தி.மு.க.) உள்பட அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் பகுதி குறைகள் குறித்து பேசினர்.
இந்த கூட்டத்தில் 57 தீர்மானங்கள் மன்றத்தின் முன் வைக்கப்பட்டது. அப்போது அஜந்தாவில் மனை பிரிவுகள் வரையறைக்கு அனுமதி கேட்டு வைக்கப்பட்ட தீர்மானத்தில், எந்த இடம், எந்த வார்டு என குறிப்பிடவில்லை.
மேலும் அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது. எனவே லே-அவுட்டுகளை கவுன்சிலர்கள் பார்வையிட வேண்டும் என்றும், அதன் பின்பே ஒப்புதல் அளிக்கவும், அதுவரை நிறுத்தி வைக்கவும் வேண்டும் என கவுன்சிலர் தியாகராஜன் தெரிவித்தார். அவரது கருத்துக்கு பெரும்பாலான கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்ததால் அந்த தீர்மானம் உள்பட 6 தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.