உள்ளூர் செய்திகள்

38 பேரின் உயிரை பறித்த கள்ளச்சாராயம்: சாராய வியாபாரி சின்னத்துரை தலைமறைவு

Published On 2024-06-20 06:58 GMT   |   Update On 2024-06-20 06:58 GMT
  • சின்னத்துரை என்பவர் கள்ளச்சாராய மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
  • 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கள்ளச்சாராயத்தை விற்று வந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி விசாரணை தொடங்கி உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் அதனைச்சுற்றி உள்ள மாவட்டங்களிலும் கள்ளச்சாராய விற்பனை கொடி கட்டி பறந்து கொண்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கள்ளச்சாராயம் காய்ச்சுவதை காட்டுப்பகுதியில் வைத்து தொழில் போலவே பலர் செய்து வந்திருப்பதும், போலீசார் அதனை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை என்பவர் கள்ளச்சாராய மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரிடம் இருந்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சாராயத்தை சில்லரை விற்பனைக்கு வாங்கி சென்று பலரும் குடித்து வந்துள்ளனர். 70 வழக்குகளில் தொடர்புடைய இவர் தற்போது தலைமறை வாகியுள்ளார்.

அவரை பிடிப்பதற்கு போலீசார் அதிரடி வேட்டை யில் ஈடுபட்டுள்ளனர். அவருடன் கள்ளச்சாராய மொத்த விற்பனைக்கு துணையாக இருந்த 10 பேரும் தப்பி ஓடி தலைமறைவாக உள்ளனர்.

அவர்களை பிடிப்பதற்கு போலீசார் வலை விரித்துள்ளனர். வியாபாரி சின்னத்துரையிடம் இருந்து சாராய பாக்கெட்டுகளை வாங்கி கருணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மறைத்து வைத்து 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கள்ளச்சாராயத்தை விற்று வந்துள்ளனர். அவர்கள் யார்-யார்? என்கிற பட்டியலையும் போலீசார் சேகரித்துள்ளனர்.

கள்ளச்சாராய கும்பலை பிடிக்க ஏற்கனவே 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டிருந்தன. தற்போது கூடுதலாக 5 தனிப்படைகளும் ஏற்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News