திண்டுக்கல்லில் ரெயில் மறியல் போராட்டம் நடத்திய சி.பி.எம். கட்சியினர் கைது
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திண்டுக்கல்லில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுட்டனர்.
- தண்டவாளத்தில் படுத்தும் போராட்டம் நடத்தியவர்களை குண்டுகட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
திண்டுக்கல்:
மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்தும், வேலையில்லா திண்டாட்டம், தொழிலாளர் விரோத கொள்கைகள், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திண்டுக்கல்லில் ரெயில் மறியல் போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்றுகாலை மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர்ராமலிங்கம் தலைமையில் நகரச்செயலாளர் அரபுமுகமது, ஒன்றிய செயலாளர் சரத்குமார், நிர்வாகிகள் ஜோதிபாசு, கணேசன், மாரியம்மாள், தவக்குமார் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பியவாறு ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர். இருந்தபோதும் அவர்கள் தடுப்புகளை தாண்டி உள்ளே நுழைந்து ரெயிலை மறித்தும், தண்டவாளத்தில் படுத்தும் போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ைகது செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இந்த சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.