உள்ளூர் செய்திகள்

மகனை பயிற்சிக்கு அனுப்பியவருக்கு நேர்ந்த கொடுமை: ஆபாச படம் எடுத்து பணம் பறித்த குத்துசண்டை பயிற்சியாளர்கள்

Published On 2024-09-24 06:50 GMT   |   Update On 2024-09-24 06:50 GMT
  • மகனுக்கு இலவசமாக குத்துச்சண்டை பழகி கொடுத்ததால் பயிற்சியாளர்களுடன் அறிமுகம்.
  • ஆபாச படம் எடுத்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்ததால் போலீசார் புகார்.

மதுரை அண்ணாநகரை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன்னை ஆபாசமாக புகைப்படம் எடுத்து பல லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளக்குத்தூண் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் அவர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த எனது கணவர் லட்சுமணன். எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டும், இளைய மகன் தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக கணவரை பிரிந்து தனியாக தையல் கடை வைத்து தொழில் செய்து வருகிறேன். இளைய மகனுக்கு குத்துச்சண்டை பயிற்சி கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருந்துள்ளது. மகனின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இலவசமாக குத்துச்சண்டை பழகுவதற்காக மகனை அனுப்பி வைத்தேன்.

அங்கே பயிற்றுநர்களாக இருந்த அனுப்பானடி வடக்கு தெருவை சேர்ந்த தேவராஜ், மேலூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் மகனுக்கு பாக்சிங் சொல்லிக் கொடுத்தனர். மேலும் பல்வேறு போட்டிகளுக்கும் அழைத்து சென்றுள்ள நம்பிக்கையில் பயிற்சி முடித்து எனது மகனை வீட்டில் இறக்கி விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இதனால் நன்கு அறிமுகமான அவர்களிடம் எனது செல்போன் எண்ணை பகிர்ந்தேன். மகன் தற்போது 10-ம் வகுப்பு படித்து வருவதால் பொதுத் தேர்வை மனதில் வைத்து அவனை குத்துச்சண்டை பயிற்சிக்கு அனுப்பாமல் இருந்தேன். சம்பவத்தன்று பயிற்றுநர்கள் தேவராஜ், ராஜ்குமார் ஆகியோர் எனது செல்போன் எண்ணிற்கு போன் செய்து கேட்டதற்கு, அண்ணாநகரில் உள்ள எனது தோழி வீட்டில் இருப்பதாக கூறினேன். அதனை தொடர்ந்து அங்கு வந்த பயிற்றுநர்கள் குடிப்பதற்கு தண்ணீர் தருமாறு கேட்டனர்.

நானும் வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்தபோது, சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் கத்தியை காட்டி சேலையை அவிழ்க்குமாறு மிரட்டினர். தாமதிப்பதற்குள் என்னை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.

அந்த ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்கள் மற்றும் எனது உறவினர்களுக்கு அனுப்பி விடுவதாக கூறி மிரட்டியதால் பல்வேறு தவணைகளில் சுமார் ரூ.4 லட்சம் வரை பணத்தை அவர்களுக்கு கொடுத்துள்ளேன். தொடர்ந்து அவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்யவே அவர்களுடைய செல்போன் எண்ணை பிளாக் செய்து விட்டேன். மற்றொரு வாட்ஸ்அப் நம்பரில் இருந்து எனது எண்ணிற்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பினர். நான் அதை பாதுகாப்பதற்குள் அதை அழித்து விட்டனர்.

மேலும் அவர்கள் தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் எல்லாம் பணம் கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டினர்.

ஒரு கட்டத்தில் தன்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை என கூறிய நிலையில், நேற்று முன்தினம் இரவு என்னை செல்போனில் அழைத்த அவர்கள் எனது அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோவை என்னிடம் கொடுத்து விடுவதாக ஆசைவார்த்தை கூறி தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரிக்கு பின்புறம் வருமாறு கூறினர். அதனை நம்பி நான் அங்கு சென்றபோது நான் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை கழட்டித் தரச் சொல்லி மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

மேலும் இதை யாரிடமாவது வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவோம் என்றும், போலீசில் புகார் அளித்தால் என்னோடு பல ஆண்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் சொல்வோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும்தான் கொடுத்த 4 லட்சம் பணத்தை திருப்பி வாங்கித்தர வேண்டும். என்னை ஆபாச படம் எடுத்து பணம் பறித்த பயிற்சியாளர்கள் ராஜ்குமார், தேவராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Similar News