உள்ளூர் செய்திகள்

அடகு நகைகளை வெட்டி எடுத்து பல கோடி மோசடி புகார்

Published On 2024-06-30 06:15 GMT   |   Update On 2024-06-30 06:15 GMT
  • மோசடி தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
  • வாடிக்கையாளர்கள் எத்தனை நபர்களுக்கு இதுபோன்ற மோசடிகள் அரங்கேறி உள்ளது என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.

திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் அடகு வைத்துள்ள நகைகளில் 2 கிராமம் முதல் 8 கிராம் வரை வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த குற்றச்சாட்டின் பேரில் அடகு வைத்த வாடிக்கையாளர்கள் கடந்த ஏழு நாட்களாக அடகு வைத்துள்ள நகைகளில் நம்முடைய நகைகளிலும் மோசடி ஏதும் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கூட்டம் கூட்டமாக வருகை புரிந்து நகைகளை திருப்பி வருகின்றனர்.

அப்படி வருகை தந்துள்ள நபர்களில் சிலருக்கு மோசடி நடந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் தற்சமயம் வங்கி கிளை மேலாளராக இருந்து வருபவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் புதிய மேலாளராக பொறுப்பேற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் எங்களைப் போன்ற பொதுமக்கள் பண தேவைக்காக அடகு வைக்கும் தங்க நகைகளை வெட்டியும், பற்றவைத்தும், சுரண்டியும் இருக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது.

மேலும் பாதுகாப்பாக வங்கி லாக்கரில் வைக்கப்பட்டு இருக்கும் நகைகள் எப்படி, யார் மூலம் இவ்வாறான மிகப்பெரிய மோசடிக்கு உட்படுத்தப்படுகிறது? வங்கிக்குள் எவ்வாறு அரங்கேற்றப்பட்டது என்ற விவரத்தை போலீசார் கண்டறிய வேண்டும் என பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த மோசடி தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் வங்கி கிளையின் உயர்மட்ட தணிக்கை குழுவும் கடந்த ஏழு நாட்களாக வாடிக்கையாளர்கள் எத்தனை நபர்களுக்கு இதுபோன்ற மோசடிகள் அரங்கேறி உள்ளது என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் இக்கிளையில் அடகு வைத்திருக்கும் அனைவரும் தங்களது நகைகளை திருப்புவதற்காக மணிக்கணக்கில் நாள்தோறும் காத்துக் கிடந்து திருப்பி வருகின்றனர்.

நாட்டின் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையிலேயே இது போன்ற சம்பவம் நடைபெற்று உள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் வங்கியின் மீது நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.

Tags:    

Similar News