கீழப்பாவூரில் இறந்த பெண் உடல் மருத்துவ கல்லூரிக்கு தானம்
- கீழப்பாவூரை சேர்ந்த ராமலட்சுமி விவசாயம் மற்றும் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார்.
- ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதய ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மைதானம் அருகே வசித்து வருபவர் ராமச்சந்திரன் விவசாயி.
இவரது மனைவி ராம லட்சுமி (வயது 66) இவர் விவசாயம் மற்றும் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார். ராமலட்சுமி மற்றும் ராமச்சந்திரன் இருவரும் மகன் சுடலை ஈசன் என்ற அருண் வீட்டில் வசித்து வந்தனர். சுடலை ஈசன் கீழப்பாவூரில் மளிகை கடை நடத்தி வருகிறார். ராமலட்சுமிக்கு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதய ஆபரேஷன் செய்யப்பட்டு ள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் அவரை பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற பொழுது செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். உடனடியாக அவரது உடல் வீட்டிற்கு திருப்பி கொண்டு வரப்பட்டது.
பின்னர் பாவூர்சத்திரம் கண் தான விழிப்புணர்வு குழு தலைவர் கே.ஆர்.பி. இளங்கோ ஏற்பாட்டில் ராமலட்சுமியின் கண்கள் தானம் செய்யப்பட்டது. அத்துடன் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தினர் ஏற்பாட்டில் உறவினர்கள் அனைவரது சம்மதத்துடன் ராமலட்சுமி உடல் தானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டு இவரது உடலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்று உடல் தானம் செய்யப்பட்டது.
கீழப்பாவூர் பகுதியில் பெண் உடல் தானம் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.