உள்ளூர் செய்திகள்

குப்பை-கட்டிட கழிவு கொட்டுவோருக்கு கூடுதலாக அபராதம் விதிக்க முடிவு: போஸ்டர் ஒட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை

Published On 2023-06-11 10:16 GMT   |   Update On 2023-06-11 10:27 GMT
  • மாநகராட்சி தற்போது ஒவ்வொரு மண்டலத்திற்கும் குப்பைக்கு தலா ரூ.2 லட்சம், போஸ்டர் ஒட்டுவதற்கு தலா ரூ.20 ஆயிரம், கட்டிட கழிவுக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளது.
  • போஸ்டர் ஒட்டியது தொடர்பாக ஆயிரம் பேருக்கு மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை:

சென்னை மாநகராட்சியை சிங்கார சென்னையாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பது, சாலை ஓரங்களில் போஸ்டர் ஒட்ட தடை, கட்டிட கழிவுகளை கொட்டுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. எனினும் அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி இது நீடிப்பதால் சென்னை நகரின் அழகு சீர்கெட்டு வருகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் அந்தந்த மண்டலங்களில் தனிக்குழு அமைக்கப்பட்டு குப்பை, கட்டிட கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோர், போஸ்டர் ஒட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அபராதம், வழக்கு, எச்சரிக்கை என அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு நட வடிக்கைகள் எடுத்தாலும் பொதுமக்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாமல் உள்ளது.

இதைத் தொடர்ந்து மாநகராட்சி தற்போது ஒவ்வொரு மண்டலத்திற்கும் குப்பைக்கு தலா ரூ.2 லட்சம், போஸ்டர் ஒட்டுவதற்கு தலா ரூ.20 ஆயிரம், கட்டிட கழிவுக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளது.

இவற்றின் மூலம் மாதம் ரூ.63 லட்சம் வசூலிக்க முடிவு செய்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

கடந்த மே 12-ந்தேதி முதல் ஜூன் 6-ந்தேதி வரை குப்பைகொட்டியோரிடம் ரூ.13 லட்சத்து 69 ஆயிரம், கட்டிட கழிவு கொட்டியோரிடம் இருந்து ரூ.9 லட்சத்து 47 ஆயிரத்து 165, போஸ்டர் ஒட்டியவர்கள் மீது 674 வழக்கு மற்றும் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, "சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும் பொது இடங்களில் குப்பை, கட்டிட கழிவுகள் கொட்டுவது, போஸ்டர் ஒட்டுவது, பேனர் வைப்பது தொடர்ந்து நீடிக்கிறது. மாதத்திற்கு ரூ.25 லட்சத்துக்கு மேல் அபராதம் விதிக்கப்படுகிறது. போஸ்டர் ஒட்டியது தொடர்பாக ஆயிரம் பேருக்கு மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆனாலும் பொதுமக்களிடம் பெரிய அளில் மாற்றம் இல்லை. எனவே பள்ளி, கல்லூரி அளவிலும், பொதுமக்களிடமும் குப்பைகளை கையாள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.

Tags:    

Similar News