போலி ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு புதுச்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகம் முற்றுகை
- தொட்டியாபாளையத்தில் 12 சென்ட் விவசாய நிலத்தை, அருகில் வசிக்கும் தேவி, அவரது மகன் சஞ்சித் ஆகிய இருவரும் ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் தயார் செய்து, அந்த நிலத்தை விற்பனை செய்ய முயற்சிப்பதாக புகார் எழுந்தது.
- இந்த நிலையில், அந்த இடத்தை பத்திர பதிவு செய்யக்கூடாது என புதுச்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்திலும், நாமக்கல் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலும் மணிவேல் தரப்பில் தடை மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தை அடுத்துள்ள லக்கபுரம் பஞ்சாயத்து தொட்டியா பாளையத்தைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 52), விவசாயி. இவருக்கு சொந்தமான 12 சென்ட் விவசாய நிலத்தை, அருகில் வசிக்கும் தேவி, அவரது மகன் சஞ்சித் ஆகிய இருவரும் ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் தயார் செய்து, அந்த நிலத்தை விற்பனை செய்ய முயற்சிப்பதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், அந்த இடத்தை பத்திர பதிவு செய்யக்கூடாது என புதுச்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்திலும், நாமக்கல் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலும் மணிவேல் தரப்பில் தடை மனு அளிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், புதுச்சத்திரம் போலீசிடமும் புகார் மனு அளித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அந்த நிலம் தொடர்பான தடை ஆணை மீது எவ்வித விசாரணை மேற்கொள்ளாமல் போலி ஆவணங்களை வைத்து அந்த இடத்தை திருநாவுக்கரசு என்பவருக்கு பத்திர பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மணிவேல், அவரது உறவினர்கள், அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் புது சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
அப்போது பதிவாளர் அமுதா கூறுகையில், சம்பந்தப்பட்ட இடம் பத்திர பதிவு செய்யப்பட்ட நாளன்று நான் விடுப்பில் இருந்தேன். அன்றைய தினம் கூடுதல் பொறுப்பு வகித்த பதிவாளர் பத்திரப்பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார். போலி ஆவணங்களை வைத்து பத்திர பதிவு செய்து இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூறினார்.
இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்து சென்றனர். இதற்கு இடையே அந்த பத்திரபதிவு குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.