உள்ளூர் செய்திகள்

பரங்கிமலை-பல்லாவரத்தில் ரூ.2,500 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்

Published On 2023-11-27 10:51 GMT   |   Update On 2023-11-27 10:51 GMT
  • அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மற்றும் அதில் கட்டிடம் கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
  • ஒரு சில இடங்களில் சிலர் தங்களிடம் இடத்திற்கான 300 வருட பத்திரங்கள் மற்றும் பட்டா உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர்.

ஆலந்தூர்:

பரங்கிமலை மற்றும் பல்லாவரம் கண்டோன் மென்ட் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆக்கிரமித்து உள்ளதாகவும் அதில் பல ஆண்டு காலமாக கட்டிடங்கள் இயங்கி வருவதாகவும் செங்கல்பட்டு கலெக்டருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மற்றும் அதில் கட்டிடம் கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

கோர்ட்டு உத்தரவுப்படி வருவாய்த் துறையினர் கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து பல்லாவரம் தாசில்தார் தலைமையில் போலீசார் உதவியுடன் அரசுக்கு சொந்தமான இடங்களை மீட்கத்தொடங்கினர். ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள கட்டிடங்களுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது. பின்பு ஆக்கிரமித்த கட்டிடங்களை ஜே.சி.பி எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதில் தனியார் வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், விளையாட்டுக் கிளப்புகள், வர்த்தக கட்டிடங்கள், ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடங்கும்.

பரங்கிமலை மற்றும் கண்டோன்மெண்ட் சுற்றியுள்ள பகுதிகளில் அரசுக்கு சொந்தமான சுமார் ரூ.2,500 கோடி மதிப்புள்ள 15 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக வருவாய்த்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

மீட்கப்பட்ட இந்த இடங்களில் அரசு கட்டிடம் மற்றும் மெட்ரோ ரெயில் பணிகளுக்கான இடம், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடமாக மாற்றலாம் என்று வருவாய்த்துறை மூலமாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கு பொது மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

ஆலந்தூரை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ஆலந்தூர் மற்றும் பரங்கிமலை ரெயில் நிலைய பகுதியில் வாகனம் நிறுத்தும் இடங்கள் நாள்முழுவதும் நிரம்பி வழிகிறது. வாகன நிறுத்தும் இடம் அமைப்பதால் இந்த பிரச்சினையை தீர்ப்பதுடன், அரசு போதிய வருவாயும் ஈட்ட முடியும் என்றார்.

ஆனால் பரங்கிமலை பகுதியில் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ள ஒரு சில இடங்களில் சிலர் தங்களிடம் இடத்திற்கான 300 வருட பத்திரங்கள் மற்றும் பட்டா உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர். இது போன்ற ஆவணம் அதிகாரிகளிடம் இல்லை. இதனால் வருவாய் துறை அதிகாரிகள் தவறாக சீல் வைத்துவிட்டதாக பாதிக்கப்பட்ட சிலர் குற்றம்சாட்டி உள்ளனர்.

Tags:    

Similar News