வளர்ச்சிப்பணிகள் குறித்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆய்வு
- நகர்ப்புற வறுமையானது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.
- பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
காங்கயம் :
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சி மற்றும் காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி நிர்வாகத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வு குறித்து அவர் கூறியதாவது:-
சமூகத்தில் அனைத்து பிரிவினரையும் பொருளாதார ரீதியான வாய்ப்புகள் சென்றடைய நகர்ப்புற பகுதிகளில் நிலையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் அவசியமாகும். மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்துவதும், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பாதகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கடமையாகும்.
நகர்ப்புற வசிப்பிடங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மக்கள் சிறப்பாக வாழ தகுதியான சூழ்நிலையை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நகர்ப்புற வறுமையானது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. அரசு தற்போது பல்வேறு கொள்கைகளை வகுத்து மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு உட்கட்டமைப்பு வளர்ச்சிகள் மேற்கொள்வது உள்பட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
காங்கயம் நகராட்சி பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.13 கோடியே 66 லட்சம் மதிப்பிலும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சத்தில் நடைபெற்று வரும் புதிய வளர்ச்சித்திட்டப்பணிகள், வெள்ளகோவில் நகராட்சியில் கலைஞரின் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 81 லட்சத்தில் நடைபெற்று வரும் வாரச்சந்தை மேம்படுத்தும் பணிகள், உப்புப்பாளையத்தில் ரூ.30 லட்சத்தில் குளம் சீரமைக்கும் பணி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் வெள்ளகோவில் பஸ் நிலையத்தில் பூங்கா அமைக்கும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் தாராபுரம் நகராட்சி, உடுமலை நகராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர்கள் மோகன்குமார் (வெள்ளகோவில்), வெங்கடேசன் (காங்கயம்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.